புகையிலை உடல்நலத்தைக் கடுமையாகப் பாதிப்பதால் வளர்ந்துவரும் புகையிலைப் பயன்பாடு உலகம் முழுவதும் கவலையோடு கவனிக்கப்படுகிறது.
இந்த புகையிலைப் பயன்பாட்டுடன் தொடர்புடைய குருதியோட்டக்குறை இருதய நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, கடுமையான சுவாச நோய்கள் ஆகிய பரவா நோய்கள் உலகம் முழுவதும் அதிக மரணத்துக்குக் காரணமாக உள்ளன.
அனைத்து வயதினரையும் பாதிக்கும் பல நோய்களுக்கு புகையிலையே முக்கியமான ஆபத்துக் காரணி. புகையிலையில் 5000 நச்சுப்பொருட்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும் ஆபத்தானதுமானவை பின்வருமாறு
1) நிக்கோட்டின்
புகையிலையின் விளைவுகளுக்கு முக்கிய காரணம் அதில் அடங்கியுள்ள நிக்கோட்டினேயாகும். இந்த நச்சுப்பொருளான அதன் பழக்க அடிமைத் தனத்துக்கு புகைப்பவரை இட்டுச் செல்லுகிறது. உறிஞ்சப்பட்ட நிக்கோட்டின் ஒரு சில வினாடிகளிலேயே மூளையை எட்டுகிறது. மூளையின் ஏற்பிகளில் நிக்கோட்டின் கட்டுண்டு மூளை வளர்சிதை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.பின்னர் நிக்கோட்டின் உடல் எங்கும் உள்ள எலும்புகளுக்கும் சதைகளுக்கும், விநியோகிக்கப் படுகிறது. பிற போதை மருந்துகளைப் போன்றே தன் செயலுக்கான ஏற்புத்தன்மையை தானே உருவாக்கிக் கொள்கிறது.
2) கார்பன் மோனாக்சைடு
இரத்தத்தால் எடுத்துச்செல்லக் கூடிய ஆக்சிஜன் அளவைக் கார்பன் மோனாக்சைடு குறைத்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.
3) தார்
ஒட்டும் சக்கையான தாரில் பென்சோபைரீன் உள்ளது. இது ஒரு புற்று நோயை விளைவிக்கும் அபாயகரமானப் பொருளாகும்.
புகையிலையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், அம்மோனியா, ஆவியாகும் நைட்ரோசமைன்கள், ஐடிரஜன் சையனைட், ஆவியாகும் கந்தகம் கொண்ட கூட்டுப் பொருட்கள், ஆவியாகும் ஐடிரோகார்பன்கள், ஆல்கஹால்கள், ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் ஆகியவை பிற கூட்டுப்பொருட்கள். இக்கூட்டுப் பொருட்களில் சில உடலின் வெவ்வேறு பாகங்களில் புற்றுநோயை ஏற்படுத்துவன ஆகும்.
புகையிலையை உள்ளெடுக்கும் வடிவங்கள்
- சிகரெட்
- பீடி
- சுருட்டு
- புகைக்குழல் (உக்கா)
- புகையிலை மெல்லுதல்
- கிராம்பு சிகரெட்
- மூக்குப்பொடி
- மின் – சிகரெட்
புகை பிடிக்காதவர்கள் கூட அருகில் உள்ள புகை பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையில் உள்ள நிக்கோட்டினும் நச்சு வேதிப்பொருட்களும் கலந்த புகையை சுவாசித்தால் மேற்கண்ட பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் பல்வேறு விளைவுகள்
1) பொருளாதார இழப்பு
2) ஆரோக்கிய இழப்பு
புகையிலையோடு தொடர்புடைய புற்றுநோய்கள்
மூச்சுக்குழல், நுரையீரல், மேல் இரைப்பைக்குடல் பாதை, கல்லீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வாய்க்குழி, மூக்குக்குழி, கருப்பைவாய் போன்ற புற்று நோய்கள் புகையிலையோடு சம்பந்தப்பட்டவை. புகையற்ற புகையிலை (மெல்லும் புகையிலை, மூக்குப்பொடி போன்றவை) வாய்க்குழி புற்றுநோய்க்கு முக்கிய காரணமாகும்.
புகையிலையோடு தொடர்புடைய இதய நரம்பு நோய்கள்
- மாரடைப்பு மூளையின் இரத்த நாள நோயாகும். புகையிலையின் பாதிப்பால் இரத்த நாளம் சுருங்குகிறது அல்லது வெடிக்கிறது. இதனால் நினைவிழந்து பக்கவாதம் உண்டாகிறது.
- புகையிலை இதய நாளங்களைப் பாதிப்பதால் இரத்த ஒட்டம் குறைகிறது அல்லது இதயத்தசைகள் செயலிழக்கின்றன. இது இதய நாள நோய் எனப்படும் மாரடைப்பு ஏற்படும்.
- பிற ஆபத்து விளைவிக்கும் காரணிகளான கொழுப்பு, மிகை இரத்த அழுத்தம் ஆகியவற்றோடு புகைபிடித்தல் ஒத்துழைத்து இதய நாள நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
புகையிலையோடு தொடர்புடைய சுவாச நோய்கள்
- நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நாள்பட்ட நுரையீரல் அழற்சி, திசு விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும்
- கடுமையான ஆஸ்துமாவுடன் புகைபிடித்தல் தொடர்பு உடையது
- காசநோய்
புகையிலையோடு தொடர்புடைய பெண்களின் பேறுகால மற்றும் பிறந்த குழந்தைகளில் தோன்றும் பாதிப்பும் விளைவுகளும்
- கர்ப்பகாலத்தில் இரத்தப் போக்கு
- கரு இடம்மாறுதல்
- கர்ப்பச்சிதைவு
- குறைப்பிரசவம்
- குழந்தை இறந்து பிறத்தல்
- நச்சுக்கொடி பிரச்சினைகள்
- தாய் புகைப்பதால் பிறவிக் குறைபாடுகளான முகவாய்ப் பிளவு, வளைபாதம், இதய மேலறை-இடைச்சுவர் குறைபாடுகள் ஏற்படலாம்
- குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் ஆபத்து
- குழந்தைப்பருவத்தில் மிகை இரத்த அழுத்தம்
- அதிக உடல்பருமன் ஏற்பட அதிக வாய்ப்பு
- வளர்ச்சி குன்றுதல்
- நுரையீரல் செயல்பாடு குறைதல்
புகைப்பழக்கத்தால் பின்வரும் நிலைமைகள் மேலும் மோசமாகலாம்
- வாத நிலைகள்: முடக்கு வாதம்
- சிறுநீரகம் செயலிழப்பு
- கண் நோய்: வயது சம்பந்தப்பட்ட கருவிழிச் சிதைவு
- பற்சொத்தை போன்ற பல் வியாதிகள்
- நீரிழிவு
- குடல் அழற்சி நோய்கள்