இலந்தை பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள்

கிராமங்களில் தான் இலந்தைப் பழம், காரம்பழம், கோவாப்பழம் என பல வகைகள் கிடைக்கின்றன. இந்த பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. இங்கு இலந்தை பற்றி பார்ப்போம். இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம். தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.

இதற்கு சிறிய பேரிச்சை, காய்ந்த பழம் வத்தல் என்று பல பெயர்கள் உண்டு.இதில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மிதமான சர்கரை சக்தி உள்ளது. இந்த இலந்தைப் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்களைப் பற்றியும், மருத்துவக் குணங்களைப் பற்றியும் பார்ப்போம்.

  • இலந்தை உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
  • இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
  • இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் உள்ளது.இந்த இலைகளை நன்கு அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் பெற முடியும்.
  • உடலின் மேற்பகுதியில் வரும் கோடைக்காலக் கட்டிகள் மீது இதன் இலையை அரைத்துக் கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

 

  • இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், வேர், பட்டை பசியைத் தூண்டுபவையாகவும், பழம் சளியை  நீக்கவும், மலமிளக்கியாகவும், பசியை அதிகரிக்கக் கூடியதாகவும் உள்ளது.
  • இது முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.
  • உடலில் சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இதனால் இவர்கள் இலேசாக கீழே விழுந்தால்கூட எலும்புகள் உடைந்து போகும். இவர்கள் இலந்தைப் பழம் கிடைக்கும் காலங்களில் வாங்கி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும். பற்களும் உறுதிபெறும்.

 

  • உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாகலாம்.மேலும் பித்த நீர் அதிகரிப்பால் இரத்தம் சீர்கேடு அடையும். இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு.
  • பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.
  • இலந்தை உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க நல்ல மருந்தாகும்.
  • பசியில்லாமல் அவதிப்படுபவர்களும், செரிமானம் ஆகாமல் கஷ்டப் படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி விட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.