நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும்.
இந்த விவசாய முறையில் நிலம், தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவற்றை நீடித்து நிலைக்கும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் செயல்படவேண்டும்
இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய், அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, நல்ல மகசூல் எடுப்பதுடன், விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.
இயற்கை விவசாயத்தில் உள்ளடங்கும் செயல்கள்:
- பயிர்களின் கழிவுகளை சிதையச் செய்தும், பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்.
- சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்.
- பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்.
- பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்.
- மண்ணிற்கு மேல் மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுத்தல்
- சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
- நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
- நல்ல பயிர் மேலாண்மை
- பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
- இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்
இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.
நீர் மேலாண்மையும் என்பது அனைத்து குளங்களையும், குட்டைகளையும், கண்மாய்களையும், ஊருணிகளையும் தூர் எடுக்கவும், ஆழப்படுத்தவும் செய்தல் ஆகும்.மேலும் அனைத்து கிராமங்களிலும் புதிய ஏரிகளையும், குட்டைகளையும், நீர் பிடிப்பு பகுதிகளை உருவாக்குதலும் நீர் பாசன வாய்க்கால்களைச் செப்பனிடதலும்,பண்ணை குட்டைகளை உருவாக்குவதை ஊக்கப்படுத்துதலும் ஆகும்.மேலும் நீர் மேலாண்மையின் முக்கிய செயலாக மரங்களை வளர்த்தலைக் கூறலாம். ஏனெனில் இவையே விவசாயத்திற்கு தேவையான நீரின் மூலம் ஆகும்.
நல்ல கால்நடைகளை வளர்ப்பது என்பது மாடு மற்றும் எருமையினங்கள், ஆடுகள், கோழிகள்,பன்றிகள்,மீன்கள் போன்ற விலங்குகளை வளர்ப்பதும்,
அவற்றிலிருந்து கிடைக்கும் பால்,மாமிசம் போன்றவற்றை உணவாகவும், அவற்றின் கழிவுகளை இயற்கை விவசாயத்தில் உரமாகவும் பயன்படுத்துதலும் ஆகும்.